Tuesday, April 26, 2022

சொல்லும் பொருளும்

 அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்கு

இன்பம் ஆவாய் எல்லாமும் நீயாவாய், – பொன்பாவை

கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி

ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள்.

----

மேலே உள்ளப்பாடலை ஒரு முறை படித்தாலே அகராதியை புரட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லாமலே நம்மால்  எளிதாக பொருளை  புரிந்துக்கொள்ள முடியும்.

இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமழிசை ஆழ்வாரால் எழுதப்பட்ட நான்முகன் திருவந்தாதியில் உள்ள பாசுரம்.

இயற்றப்பட்ட காலம் 7வது அல்லது 6வது நூற்றாண்டாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது. எப்படி பார்த்தாலும் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டப்பாடல். ழ’னவும் வராது ஷ’னவும் வராது.. ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி என்கிற இந்த காலகட்டத்திலும் கூட எளிமையாக மனதில் ஒட்டிக்கொள்ளும் சொல்லும் பொருளுமாய் அமைந்திருக்கின்ற இந்த பாடலைப்போல பல பாடல்கள் நம் இலக்கியத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

அப்படி ஒவ்வொன்றாக தேடித்தேடி படிக்கும் பொழுது  மொழியின் மேலும் இத்தனை மொழி ஆளுமைக்கொண்ட புலவர்கள், கவிகள், ஆழ்வார் நாயன்மார்கள் மேலும் காதல் கன்னாபின்னாவென்று அதிகமாகிறது . பைந்தமிழ் என்று நம் மொழியைப்புகழ்வதில் தான் எவ்வளவு பொருத்தம்!

பாடல் மட்டுமல்ல, பல சமயங்களில் பாடலின் பின்னணிக்கதையும் கூட  சுவையாக இருக்கும்.  உதாரணமாக, திருமழிசை ஆழ்வாரின் கீழ்கண்ட பாடல் :

“கணிகண்ணன் போகின்றான்; காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா!

செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்

பை நாகப்பாயை சுருட்டிக் கொள்”

கணிக்கண்ணன் என்பவர் திருமழிசை ஆழவாரின் சீடராம். அந்த சமயத்தில் காஞ்சிபுரம் கோவிலில் திருப்பணி செய்துகொண்டிருந்த மூதாட்டி ஒருவர், ‘இந்த வயசான காலத்துல கோவில் பணியை முழு வேகத்தோடு செய்ய முடிவதில்லையே’ என கடவுளிடம்  நொந்துகொண்டாராம். அங்கிருந்தபடி இதனைக்கேட்ட திருமழிசை ஆழ்வார் தன் யோகசித்தியால் மூதாட்டியை இள மங்கையாக மாற்றிவிட்டாராம். விஷயம் கேள்விப்பட்ட பல்லவ மன்னன் தன்னையும் அப்படி மாற்றுமாறு உன் குருவிடம் சொல் என்று திருமழிசை ஆழவாரின் சீடனான கணிக்கண்ணனை அழைத்து  மிரட்டினாராம். ஒத்துழைக்காத கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவும் பிறப்பித்தாராம். மன்னனது நடவடிக்கையை கேட்டறிந்துக்கொண்ட திருமழிசை ஆழ்வார், நேராக கோவில் சன்னதிக்கு வந்து பெருமாளிடம்  ““கணிக்கண்ணன் போறானாமே ..

மணிவண்ணா.. நானும் இந்த இடத்தை விட்டு போறேன்.. நீயும் இங்க இருக்க வேண்டாம் .. கையோட உன் பாம்பை சுருட்டிக்கொண்டு கிளம்பு என்னோடு நீயும்  .. “ என்று பொருள்பட மேற்படி  பாடலைப்பாடினாராம்!

,உடனே பெருமாளும் அவர் கூடவே  கிளம்பினாராம் 🙂

பெருமாள் ஊரை விட்டு கிளம்பியதும் திருமகளும் கிளம்ப, ஊரே இருட்டடைந்ததாம். உடனே பதறிய பல்லவ மன்னன் திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்புக்கோர மனம் கனிந்த அவர்,

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய

செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்படுத்துக்கொள்”

என்றாராம்.

அதாவது, கணிக்கண்ணன் திரும்ப வந்துவிட்டான். நானும் வந்துவிட்டேன்.. அதனால் மணிவண்ணா நீயும் இங்கேயே இருக்க வேண்டும்.. போய் உன் பாம்பில் படுத்துக்கொள்!’  என  சொல்லவும் , இறைவனும் மீண்டும்  வந்து அவர் சன்னதியில் அமர்ந்துக்கொண்டாராம் 🙂

திருமழிசை ஆழ்வாரைப்பற்றி படிக்கும் போது தெரிந்துக்கொண்டது : குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் என குலங்கள் அற்றவன் நான்(ஆவர்ணர்)  என்று முதன்முதலில்  பாடியவரும் இவராகத்தான் இருப்பார்.



No comments:

Post a Comment

ஒரு ஜன்னல் என்ன செய்து விடப்போகிறது ?

ஒரு நாளில் முன் பின் அறிமுகமில்லாத எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம். கடந்து செல்கிறோம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் பார்த்த உடனேயே நம்...