Wednesday, May 11, 2022

ஒரு ஜன்னல் என்ன செய்து விடப்போகிறது ?

ஒரு நாளில் முன் பின் அறிமுகமில்லாத எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம். கடந்து செல்கிறோம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் பார்த்த உடனேயே நம்மை ஈர்ப்பார்கள் . அந்த ஈர்ப்பே பிறகு சந்திப்பாக மாறி, பின்னாளில் அவர்களுக்கும் நமக்கும் நல்லதொருஉறவாக மலர்ந்திடும்.

அந்த வகையில் , சில சொற்கள் கூட அப்படித்தான். 

ஒரு நாளில் எத்தனையோ சொற்களை தினம் கேட்கிறோம். படிக்கிறோம். கடந்துசெல்கிறோம். ஆனால் ஒரு சில சொற்கள் படக்கென மனதில் பதிந்து விடுகின்றன . 

அப்படி எனக்கு சமீபத்தில் அறிமுகமான சொல் - காலதர்.


முதலில் இந்த சொல்லைப்பார்த்ததும் காதலர் என்பதைத்தான்   தவறாக எழுதி இருக்கிறார்களோ என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது , காலதர் என்றால் தமிழில் ஜன்னல் என்று பொருளாம். 


காலதர் என்பதை பிரித்தால் கால் + அதர் என்று வரும். 

'கால்' என்பதற்கு காற்று என்ற பொருள் தமிழில் உண்டாம். தமிழில் ஒரே சொல் பல பொருள்களில் வரும் என்பதை இங்கே நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். 

'அதர்' என்பதற்கு 'வழி' என்ற பொருள் கொண்டால், 'காலதர்' என்பது 'காற்று வழி' என்ற பொருள் தருகிறது .

இப்படி 'காற்று புகும் வழி' என்ற பொருள்படும் 'காலதர்' தான் ஜன்னல் என்பதற்கு இணையான தமிழ் சொல்லாம் . 'சாளரம்' என்பதும் இங்கே பொருந்தும். 


இதற்கிடையில், சிறுமூளை சும்மா இல்லாமல் , 'ஜன்னல்' என்ற சொல் வரும் திரைப்பாடல்களை எல்லாம் மாற்றிப்பார்த்தால் என்ன என்று ஒரு நொடி கிறுக்கு வேலைப்பார்த்தது. 'சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க?' என்று பளிச்சென முதலில் வரிசைக்கட்டி வந்தவர் நம் Ak தான் .. அடுத்த வரியை 'காலதர்' என்று மாற்றி பாடினால் சிம்ரனின் பல கோடி ரசிகர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் கொடூரமான இந்தத் திட்டத்தைகைவிட்டு மீண்டும் சிறுமூளை சொற்பொருளிடம் சென்றது.

எங்கே விட்டோம்.

ஆஹ், 'காலதர்' என்ற சொல்..


பொதுவாக நமக்கு அறிமுகமான ஒரு புதியவரிடம் பேச்சு கொடுக்க முதலில், 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..!' 'நீங்க எந்த ஊரு.. ?' என துவங்குவோம். பிறகு,   'ஓ! நான் கூட அந்த பக்கம் தாங்க..! அங்க இவரைத் தெரியுமா உங்களுக்கு?!' என்போம். அது போலவே காலதர் என்ற சொல்லிடம் பேச்சுக்கொடுத்து(கூகுளிட்டு) பார்த்ததில், நம் 'காலதர்' , சிலப்பதிகாரத்தில் வளம் வந்திருக்கிறது என்று தெரிய வந்ததது. சிலப்பதிகாரத்திற்கு எதற்கு அறிமுகம்! அதனால் நேரடியாக இளங்கோவடிகளும் ஒரு வணக்கம் வைத்து விட்டு, நாம் தேடிக்கொண்டிருக்கும் 'சொல்' அங்கே எங்கேஎப்படி வந்தது என்று பார்த்து விடலாம். சும்மா ஒன்றும் இல்லை. அதற்கு கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்னால் போக வேண்டும்!

காசா பணமா இருக்கவே இருக்கிறது, மனதின் காலப்பேருந்து. சட்டென ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு ஜன்னலோரம் இருக்கை பிடித்து.. இல்லை இல்லை.. காலதர் பக்கத்து இருக்கை பிடித்து கொஞ்சம் கண்ணயர்ந்தால் போதும். மற்றதெல்லாம் இளங்கோவடிகள் பார்த்துக்கொள்வார்.


அட.. அதோ.. நாம் இறங்க வேண்டிய 'ஸ்டாப்பிங்' வந்து விட்டது. 


வெல்கம் டு புகார் சிட்டி! 


புகார் நகரம் உங்களை வரவேற்கிறது என்று போரடிக்கும் மஞ்சள் கருப்புப் பலகை போர்டிற்கெல்லாம்இங்கே வேலையே இல்லை. காற்றில் கடல் ஈரம் கலந்த வாசமும் பல மொழி பேசும் யவனர் இரைச்சலும் கிண்கிணி போல ஒன்றாகக் கேட்டால் புகார் நகரம் வந்து விட்டது என்று அர்த்தம் என்று காதைக் கடித்தார் இளங்கோவடிகள் .

ஏனெனில் அது தான் புகார் நகரத்து அடையாளம்!


மயிலாடுதுறைக்கு அருகில் காவேரி கடலில் கடக்கும் வடக்கு எல்லையில் , கடல் ஒரு பக்கமும், நிலம் ஒரு பக்கமுமாக அமைந்தபகுதியை துறைமுகத்திற்கு ஏற்ற இடமாக எண்ணிய முற்கால சோழர்கள் அங்கே ஒரு நகரம் அமைத்து அதனையே தங்கள் தலைநகரமாகவும் நிறுவுகின்றனர். பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் என்றெல்லாம் அழைக்கப்படும் புகார் நகரம் , ஒரு மெட்ரோபாலிட்டன் நகரத்தின் அனைத்து வளங்களையும் பெற்றிருந்ததை பட்டினப்பாலை, புறநானூறு சிலப்பதிகாரம் போன்றஇலக்கியங்கள் தெளிவாக பதிவு செய்கின்றன .



துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை அலைந்துதிரிந்து வாங்குவதற்கும் வேடிக்கைப்பார்ப்பதற்கும் வசதியாக புகார் நகரத்து சாலைகள் எத்தனை அகலமாக கட்டியிருக்கிறார்கள். நமக்கெல்லாம் நூறடி சாலைகள் ஒரு பதினைந்து ஆண்டுகாலமாக தான் பழக்கம் . ஆனால் புகார் நகரத்து மக்களுக்கு அதெல்லாம் சர்வ சாதாரணம் போல .


அதோ அங்கே சாலைகளின் நடுவில் ஜேஜேவென கூட்டமாக இருக்கிறதே, அது தான் நாளங்காடி. (நாள் + அங்காடி) பகலில் இயங்கும் அங்காடி. 


இரவு நேரத்திலும் முழு நேரமாக இயங்கும்  அங்காடிகள் இங்கே உண்டாம். அதற்கு அல்லங்காடி என்று பெயர். (அல் + அங்காடி). அல் என்றால் இரவு- 'அல்லும் பகலும்' என்றும் சொல்வோமே, அந்த அல் தான். 


அப்பப்பா.. எவ்வளவு கூட்டம்.. எத்தனை விதமான மக்கள்! எத்தனை விதமான வாசனைகள். துறைமுகம் அருகிலேயே அங்காடிகள் இருப்பதால் வசதியாக இங்கே வந்து விடுகிறார்கள் போல. பழுப்பு வெயிலின் பல வர்ண கீற்றைப்போல கிரேக்கர்கள், ரோமானியர்கள் , சீனர்கள் என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் அழகழகாக அசைந்தாடும் மனித முகங்கள்.


அது சரி, இத்தனைப்பேரும் எங்கே தங்குவார்கள் என்று யோசிக்கும் முன்னரே ஒரு ஆறடி உருவம் சாலையின்இருபக்கங்களிலும் ஓங்கி உயர்ந்த மாளிகைகள் ஒன்றினுள் உள்ளேசென்று மறைகிறது.


'இது புகார் நகரத்தின் அந்த காலத்து ஏர் பி என் பி. துறைமுகம் வழியாக ஊருக்குள் வரும் பிரயாணிகள்,யவனர்கள் , தொழில் நிமித்தமாக இங்கேயே சிலகாலம் தங்கிவிடும் வணிகர்கள், அவர்கள் குடும்பத்தார் எனஅவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாட மாளிகைகள். இந்த பகுதி முழுக்க மாளிகைகள் தான், இந்தப்பகுதிக்கு மருவூர்ப்பாக்கம் என்று பெயர்!' என்று மறுபடி காதைக் கடித்தார் இளங்கோவடிகள்.


இந்தப்பகுதியா? அப்படி என்றால் இன்னொரு பகுதி இருக்கிறதா ? 


இல்லாமலா? கடலின் பக்கத்தில் துறைமுகப்பகுதியில் வணிகம் வியாபாரம் செய்ய தோதுவாக இருக்கும் மருவூர்பாக்கம் இது . இங்கே வியாபாரிகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் வணிகர்கள் இருப்பார்கள் .

அதோ, அங்கே தெரிகிறதே! நிலப்பக்கமாக   அமைந்தது , பட்டினம்பாக்கம். அங்கே அரசாங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், குடிகள், காவலர்கள் இருப்பார்கள். கடல்பக்கமாக மீனவர்கள், நெசவாளர்கள், பட்டுத்துணி வணிகர்கள், முத்து பவளம் போன்ற நகை வாணிபர்கள் வசிப்பார்கள். ' என்றார். 


அடேயப்பா..எத்தனை நுணுக்கமான திட்டமிடல் என்று புகார் நகர மேலாண்மையை  வியந்தபடி அதன் பேரழகான  மாட மாளிகைகளைப்பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென வந்த வேலை நினைவுக்கு வந்தது. 


காலதர். 


வேயா மாடமும்;வியன்கல இருக்கையும்;

மான்கண் காலதர் மாளிகை இடங்களும்;

கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்

பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்;   என்று சிலப்பதிகாரத்தத்தில் இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் ,புகார் காண்டத்தில் வரும் பாடலில் தான் 'காலதர்' எனும் சொல் முதலில் காணக்கிடைக்கிறது.


வேயா மாடம் என்றால்

வியன்கல இருக்கை என்றால் பெரிய இருக்கை. வியன் - பரந்த /அகன்ற (தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்) அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இருக்கை. 



'மான் கண் காலதர் மாளிகை இடங்களும்'


'மான் போன்ற கண்களை உடைய ஜன்னல்கள் கொண்ட மாளிகைகள்!'


அதென்ன மானின் கண்களைப்  போன்றஜன்னல்கள். பொதுவாக காதலியின் கண்களை விவரிக்க மான்விழி என்று தானே சொல்வார்கள். அது சரி, அதென்ன மான் விழி.. வண்டலூர் ஜூவில் தெறித்து ஓடும் மானை தான் பார்த்திருக்கிறேனே ஒழிய ஒரு முறைக்கூட அதன் கண்ணைரசிக்கும்  அளவிற்குபக்கத்தில் வைத்து  பார்த்ததே இல்லை. உண்மையிலேயே அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் கிளம்ப, கூகிளினேன். 








அழகாகத்த்த்தான் இருக்கிறது. பார்க்க பார்க்க அகழ்ந்து செல்லும், அகண்ட, சீரான இடைவெளியில் மிதக்கும் கருமணிகள் . துறுதுறுப்பா, அடுத்த நொடி தாவலுக்கு தயாராகும் தவிப்பா என்றதொரு மாய சலனத்தைக்கொண்ட கண்கள்!

வள்ளுவர்சொல்லும் 'கண்ணின் துனித்தே கலங்கினாள்' கூட இந்த கண்கள் தானோ என்னவோ! முன்பு எப்போதோ போட்ட சண்டையை நினைவில் வைத்துக்கொண்டு கண்களில் செல்லமாக முறைத்த தலைவி, தலைவனைப்பார்த்ததும் அதனை மறந்து உடனேதுள்ளிக்குதித்து தழுவினாளாம்.


அட, எங்கே வந்து விட்டோம்! .

திருவிழாவில் தொலைவதும் தமிழில் தொலைவதும் ஒன்று தான். தொலைந்த பிள்ளையை மைக்கில் தேடும் பெற்றோர் போல, காலதர் தேடி வந்த பாப்பாவை (நான் தான்!) காணவில்லை என்று மைக்கில் குரல் கொடுக்கிறார், இளங்கோவடிகள்.

உடனே, சென்று விடுவோம்.


மான் கண்களை ஒத்த காற்று வந்து புகுந்துக்கொள்ள சீரான இடைவெளியில் அமைக்கப்பட்ட ஜன்னல்களை .. இல்லை இல்லை.. காலதரைக்கொண்ட மாட மாளிகைகளாம்!

கயவாய் என்றால் நதியின் முகவாய்




மருங்கில் என்றால் பக்கத்தில்

கயவாய் அருகே காண்போரை போக விடாமல் தடுக்கும் அழகழகான இருக்கைகள் போடப்பட்டிருக்கிறதாம். 


இப்படி புகார் நகர்த்துக்காட்சிகளை விவரித்துக்கொண்டே போகிறார் இளங்கோவடிகள்!  முழுதாக படிக்க விரும்புவர்கள்,  உரைநடையாக  விளக்கும் விக்கிப்பக்கத்திலிருந்து  தொடங்கலாம். 

ஹப்பாடி , 

சந்தித்தாலும் சந்தித்தோம், பெரிய மனிதரைத்தான் சந்தித்திருக்கிறோம், போல ! ஒரேடியாக   2000 வருடங்கள் பின்னோக்கி இழுத்து வந்து விட்டது ஒரு சொல் ..சரி போய் வந்த களைப்பு தீர,  கொஞ்சம் கண்ணசரலாம் என்றால் இப்போதைக்கு  வெளியே வர தோதில்லை  என்று உரண்டை இழுத்தபடி வேயா மாடத்து காதலரின் கீழ் நின்று  காற்று வாங்குகிறது  மனது :) 


#காலதர்_கதைகள் 

#பகுதி1




தமிழும் வரலாறும்!

அமெரிக்காவின் புரட்சி கவிஞர் பாரதி தாசன் தமிழ் மன்றம், பாவேந்தரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் முன்னிட்டு புரட்சிக்கவிஞர் பெருவிழா என்ற 9 நாள் விழாவை சிறப்பாக நடத்தினார்கள் . 


அயலக மண்ணில் பாவேந்ரை கொண்டாடும் விதமாக தமிழ் கூறும் நல்லுலகின் சான்றோர் பெருமக்கள் பலர் பங்கேற்று சிறப்பித்துக்கொண்டிருக்கும். 9 நாள் நிகழ்வில்சில தினங்களுக்கு முன் ,  பாவேந்தர் எழுதிய ‘தமிழச்சியின் கத்தி’ எனும் கவிதை நூலைப்பற்றி சிறப்பு விருந்தினர் முனைவர் திரு குறிஞ்சி வேந்தன் அவர்கள் சொல்வதைக்கேட்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுட்டி இங்கே



தமிழச்சியின் கத்தி என்ற கவிதை நூலை கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன். 

சிறு வயதில் அப்பா பேச்சுப்போட்டிக்கு எழுதித் தருவார். எனக்கு நாலேமுக்கால் கழுதை வயதாகி விட்டப்பிறகு 'நீயே கிறுக்கிக்கோ!' என்று புத்தகங்களை கைக்காட்டி விட்டு நகர்ந்துக்கொண்டார். அப்படி பேச்சுப்போட்டிக்காக படிக்க ஆரம்பித்தவை தான் கவிதை நூல்கள். முதலில்தொட்டவை, பாரதியார் கவிதைகளும் ..  திருத்தி எழுதிய தீர்ப்புகளும்.


கிரிக்கெட்டில் எப்படி ஓபெனிங் முக்கியமோ அது போல தான் பேச்சுப்போட்டிகளும் கட்டுரைப்போட்டிகளும். ஓபெனிங் ரொம்ப முக்கியம். எதுகை மோனையில்  கவிதையாக முதல் நாற்பது வினாடிகள் நன்றாக ஆரம்பித்து ஒட்டிவிட்டால் நடுவில் மானே தேனே என என்ன வேண்டுமானாலும் சேர்த்து கடைசியில் நன்றி வணக்கம் சேர்த்து நிறைவு செய்துவிடலாம் என்றவாறு அரைமண்டையாக எதையோ யோசித்துக்கொண்டிருப்பேன். எப்படி யோசித்தாலும்  ‘வானம் கலரு நீலம் ; நீ தான் என் பாலம் ‘ என்ற ரேஞ்சில் தான் கவிதை வரும். எனவே பாரதியார், பாரதி தாசன் போன்ற பெரிய தலைகளின் கவிதை நூல்களை அலசுவது வழக்கம். பீரோ நிறைய புடவை இருக்கு. எல்லாம் உனக்கு தான் எது வேணுமோ எடுத்துக்கோ என்று யாரவது சொன்னால் எப்படி இருக்கும். அப்படி தான் இந்த பெரிய தலைகளின் கவிதைகள். எல்லாமே நன்றாக இருக்கும். எதை எடுக்க எதை விடுக்க என்று என் அரையணா மண்டைக்கு விளங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிடும். தலைப்புக்கு ஏற்றவாறு எப்படியோ ஒன்றிரண்டை உருவி ஒபெனிங்கிற்கு கொஞ்சம் இடையில் கொஞ்சம் கடைசியில் கொஞ்சம் என ஆகாத வேலையெல்லாம் பார்த்த்துக்கொண்டிருந்த நாட்களில் தான் இந்த நூலையும் படித்து வைத்திருந்தேன். என்றாலும் பல ஆண்டுகளுக்கு பின்னர் இதையே முனைவர் குறிஞ்சிவேந்தன் போன்ற ஆளுமை சொல்ல கதையாக கேட்பது புது அனுபவமாக இருந்தது. 


கிட்டத்தட்ட கண்ணகி கதை போன்றதொரு கதை. அதனை சுவையான தமிழில் கவிதையாக வடித்திருப்பார் கவிஞர்.  படிக்கவே இனிமையான நடையில் இருக்கும். மிக முக்கியமாக பேச்சுப்போட்டிகளுக்கென்று எடுத்து உருவுவதற்கும்  மனப்பாடம் செய்வதற்கும் ,எளிமையாக இருக்கும் . :) 

தமிழச்சியின் கத்தி - கவிதையை இங்கே படிக்க


சரி, கதைக்கு வருவோம். கதை நடப்பது 1700களில் . டில்லியில் பாதுஷா ஆட்சி. தமிழகப்பகுதிகளைப்  பாளயங்களாக பிரித்து நடக்கிறது,ஆட்சி . ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு தலைவர் இருக்கிறார் - தலைவரை ‘பாளையப்பட்டு என்கிறார்கள் அப்படி செஞ்சி பாளையத்தின்தலைவர் தேசிங்கு ராஜா. அங்கே தான் நம் நாயகியும் நாயகனுமான சுப்பம்மா-திம்மன் தம்பதியர்  இருக்கிறார்கள். அழகியான சுப்பம்மாவைப்பார்த்து தவறான எண்ணத்தில் அணுக திட்டமிடும் இரு வட நாட்டு காவலர்கள், அவர்கள் ஆசையை நிறைவேற்ற ஒரு சதி திட்டம் தீட்டுகின்றனர். அதில் திம்மன் மாட்டிக்கொண்டுவிட, தனி ஆளாக நின்று எப்படி சதியை எதிர்க்கொள்கிறாள் என்பது தான் கதை. கதையில் ஓர் இடத்தில் தேசிங்கு ராஜாவின் முன் நிற்பாள் நாயகி. அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் விவாதத்தில்,தேசிங்கு ராஜாவிற்கு தமிழர்மேல் இருந்த வெறுப்பு நன்றாகவே வெளிப்படும். ஒரு தலைப்பட்சமாக மிகக்கொடூரமானதொரு தீர்ப்பை தருவார் மன்னர். 


தேசிங்கு ராஜாவைப்பற்றி ஆஹா ஓஹோ என்று கேள்விப்பட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முற்றிலும் வேறு விதமான ராஜாவின் சாயலை அறிமுகப்படுத்திருப்பார், பாவேந்தர். 


சிறுவயதிலிருந்தே தேசிங்கு ராஜாவின் வீர தீரத்தைப்பற்றி தான் நாம் பரவலாக கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு ஏன் அவரைப்பற்றி  எம் ஜி ஆர் அவர்களின் திரைப்படம் கூட வெளிவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து 1960-எழுபதுகளில் தேசிங்கு என்று குழந்தைகளுக்கு பெயர் கூட பிரபலம். இப்படி நாம் கேட்ட தேசிங்கு ராஜ கதைகளில்,  ஆற்காடு நவாபை எதிர்த்து போரிட்டு போர்க்களத்திலேயே உயிர்நீத்த தேசிங்கு ராஜாவின் வீரம், அதன் பிறகு உடன்கட்டை ஏறிய அவரது மனைவி, ராணியின் நினைவாக அமைக்கப்பட்ட ராணிப்பேட்டை ஊர் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உண்மையில்  நடந்தது வேறு என்று வரலாறு சொல்கிறது. 

தேசிங்கு என்று நம்மவர்களால் அழைக்கப்பட்ட தேஜ் சிங் ராஜா உண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும், அவர் 7 மாத காலமே செஞ்சியில் இருந்தார் என்றும், அவர் இறந்ததிற்கு கொஞ்ச காலத்திற்கு பின் பனையோலையில் எழுதப்பட்ட கும்மி பாடலே அவரைப்பற்றிய முதல் வரலாற்று வாழ்க்கைக் குறிப்பு என்றும் அதனைத்தொடர்ந்து வெளிவந்த தேசிங்கு ராஜா காதை மற்றும் நாட்டுப்ப்பாடல் இவை மூன்றும் தான் இன்றளவில் அவரைப்பற்றி இருக்கும் கதைகளுக்கு அடித்தளம் என்று சொல்கிறார், தேசிங்கு ராஜாவைப்பற்றிய நாட்டுப்புறப்பாடல்களை ஆய்வும் செய்யும் முனைவர் அரு இராமநாதன் குறிப்பிடுகிறார். சுட்டி இங்கே 


இப்படி நிகழும் காலத்தின் அரசியல் சூழலுக்கேற்ப, இலக்கிய/ நாடக ரசனைக்கேற்ப மாறும் கதையே பிற்காலத்தில் வரலாற்றைக்கட்டிலும் எஞ்சி நிற்பது ஒரு வித சுவாரஸ்யம் தான் .சொல்லவரும் நோக்கத்திற்காக புனையப்படும் மிகைப்படுத்தப்பட்ட படைப்புகள் ஒரு பக்கம் இருக்க இன்னொருபக்கம் நமக்கு நம் வரலாறே சரியாக சொல்லப்படுவதில்லையோ என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

நம் ஊரில் சில விஷயங்களின் மீது ஒரு பொது அபிப்ராயம் அல்லது கருத்து எடுத்த எடுப்பிலேயே திணிக்கப்பட்டிருக்கும். 

அதிலும் குறிப்பாக , “கணக்கு கஷ்டம்.. “

“தமிழ்ல பாஸ் ஆனா போதும்”. ஹிஸ்டரி போர்.. தேவையே இல்ல'  என்பது போன்ற அபிப்ராயங்கள். நம்மில் பெரும்பான்மையானோர் இவ்வகையான பொது அபிப்ராயங்களைக் கேட்டே தான் வளர்ந்திருப்போம். 

நம் மனதினில்  இவ்வாறாக வரையறுக்கப்பட்ட கருத்துக்கள் மூலமாக தான் நாம் அந்தந்த பாடங்களை அணுகியிருந்திருக்கிறோம் . 

இப்படிப்பட்ட பொதுக்கருத்துக்கள் உண்மையிலேயே அந்த பாடங்களின் அத்தியவாசத்தை நம் தலைமுறையினரிடையே எந்தளவிற்கு மட்டுப்படுத்திவிட்டது என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது . 

நமது இந்த குறுகிய பாரபட்சமான அணுகுமுறையினால் பாதிக்கப்பட்ட இரண்டு பாடங்கள் என்றால் அவை வரலாறு மற்றும் தமிழ் தான் என்று நினைக்கிறேன். இவற்றை பாடங்கள் என்றளவில் நாம் முதலில் சுருக்கியதே இவற்றிற்கு கிடைத்த பெரும் அடி என்று இதை எழுதும்போது எண்ணத்தோன்றுகிறது. 


தமிழாவது பரவாயில்லை பன்னிரெண்டாவது வரையாவது ஆர்வத்தோடு  படிக்க முடிந்தது. சமூக அறிவியல் சுத்த மோசம். பத்தாவது பரீட்சையொடு ஹாப்படா இனி கண்ட கண்ட வருஷத்தை எல்லாம் மனப்பாடம் பண்ண தேவையில்லை என்று நிம்மதியோடு மூட்டைக் கட்டியாகிவிட்டது. அவ்வளவு தான் எனக்கிருந்த வரலாறு அறிவு.. 

ஆனால் வாசிப்பின் மேல் ஒரு போதும் ஆர்வம் குறைந்ததே இல்லை. 

தொடர் வாசிப்பில் வரலாறு எங்கேயாவது  எட்டிப்பார்க்கும் போதெல்லாம் ‘நல்லாத்தானே இருக்கு!’ என்று தான் தோன்றியது.  குறிப்பாக மதனின்  வந்தார்கள் வென்றார்கள் தான் அதுவரை நான்  டூ விட்டிருந்த வரலாற்றோடு மானசீகமாக பழம் விட வைத்தது. 


அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து கல்லூரித்தோழி ஒருத்தி போகிறபோக்கில்  “ஆமா நீ  சிவகாமி சபதம் படிச்சிருக்கியா ?” என்று கேட்டாள். ‘சிவகாமி கம்ப்யூட்டர் தெரியும்.. அதென்ன சிவகாமி சபதம்?’ என்று வீட்டில் விசாரித்ததில் கண் முன்னே ஜென் சிரிப்போடு அறிமுகமானார் அமரர் கல்கி . எந்த வரிசையில் படிக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாமல்  ஒரே வேலையாக கல்கியைப் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தை கையில் எடுத்தாலே அம்மாவுக்கு ஆகாது.. சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியபடியே படித்து முடித்ததும் தலை கிர்ரென்று இருந்தது. மே கஹான் ஹூ என்பது போல.. ஒரு சரியல் ரியாலிட்டியில் இருப்பதாக ஒரு பிரம்மை. மங்கு மங்கு என்ற கடினப்பட்டு படித்த வரலாற்றை இப்படிக்கூட அழகாக கதை வடிவில் சொல்ல முடியுமா என்று ஒரு ஆச்சரியம். அதே ஆச்சரியத்தோடு பொன்னியின் செல்வனில் நுழைந்தேன் . ஆனால் பொன்னியின் செல்வனை முன்பைப்போல ஒரே மூச்சில் படிக்க இயலவில்லை. சொந்த ஊர் திரும்பும் போது வாஞ்சையாக படும் ஊர்க்காற்றை உள்ளூர இழுத்து பெருமூச்சு விடுவதைப்போல எப்போதெல்லாம் புத்தகத்தின் அருகே செல்கிறேனோ அப்போதெல்லாம் கிடைக்கும் பக்கங்களில் புகாருக்கும் இலங்கைக்கும் ஆழவார்க்கடியானோடு மாறி மாறி அலைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு பாடமாக வெறும் மதிப்பெண்ணாக இருந்த வரலாறு, ஒரு  கதையாக, கற்பனைக்கும் எட்டாத உவகையாக மனதில் உருவெடுத்திருந்தது வரலாற்றின் மீது நல்ல அனுபவத்தைத்தந்தது. அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு வரலாற்றின் மீதான ஆர்வத்தை  மீண்டும் தட்டி எழுப்பி வரவேற்பறைக்கு கொண்டு வந்தது எழுத்தாளர் கோகுல் சேஷாத்திரியின் வரலாற்று நாவல்கள் தான். அவரது ராஜகேசரியும் சேரர்க்கோட்டையும் பலப்பல கேள்விகளை மனதில் எழுப்பின. ஒரு வரலாற்று புனைவு வாசகியாக என் கற்பனைக்குதிரைக்கு புது தீனி கிடைத்தது போல இருந்தது. விளைவு, கதையைப்படிப்பதோடு மட்டுமல்லாமல் கதையில் சொல்லப்பட்டிருந்த  வரலாற்று செய்திகளைப்படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது. அப்படியே கோயில் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ள செய்திகள், அதன் தொடர்புடைய  வரலாற்று கதைகள் என விரிந்துக்கொண்டே சென்ற தேடலின் போது கண்ணில் பட்ட தகவல்கள் ஏராளம். அவற்றில் சில தகவல்கள் மனதில் சில கேள்விகள் துளைத்து எடுக்கின்றன. அதை இங்கே கேட்டு விடுகிறேன். 



ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை மாநில ஆங்கில வழிக் கல்வியில்  என் பள்ளிக்காலம் 1996-2005 வரை. 

பன்னிரெண்டாவது வரை தமிழ் கட்டாய பாடம். 

பத்தாவது வரை சோசியல் சயின்ஸ் எனும் சமூக அறிவியல்(History + Civics + Geography  கட்டாயப்பாடம். இதில் எனக்கு நினைவில் நிற்கிற வரை பள்ளிக்காலத்தில்  தமிழக வரலாறு மற்றும்  தமிழ் மன்னர்கள் குறித்து நாங்கள் படித்து தெரிந்துக்கொண்டது எல்லாமே தமிழ் பாட நூல்  வழியாகத்தான். 

வரலாற்று பாடங்களில் தமிழ் வரலாறு  குறித்தோ தமிழக மன்னர்களின் வரலாறு  குறித்தோ படித்த ஞாபகம் இல்லை. கல்கியும் சாண்டில்யனும் பாலகுமாரனும் சு வே’வும் கி ரா வும் 

கோகுல் சேஷாத்திரியும் ஏற்படுத்திய வரலாற்றின் மீதான நேர்மறை தாக்கத்தை ஏனோ எங்கள் காலத்து வரலாற்று பாடங்கள் ஏற்படுத்தவே இல்லை! 


பைபிளில் ஏசுக்கிறிஸ்துவை பற்றின வரலாறு சரியாக பத்து வயது வரை இருக்கும் மீண்டும் அவர் குறித்து 30 வயதில் தான் தொடங்கும். இடையில் அவருக்கு  என்ன நடந்தது என்பது வரலாற்று ஆய்வாளர்களை இன்றுவரை  துறுதுறுவென வைத்திருக்கும் புரியாத புதிர். வீட்டில் என்று ஒரு புத்தகம் கூட அப்பா வைத்திருந்ததாக ஞாபகம். விடுபட்ட அந்த காலத்திய யேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு இன்று வரை கிடைக்கவில்லை. அதனால் பைபிளில் சேர்க்க வழியில்லை.


ஆனால் எங்கள் சமூக அறிவியல் பாடநூலில் ஸ்டோன் ஏஜ் பிரான்ஸ் ஏஜ் மெடிவில் ஹிஸ்டரி என்று வந்து அலேக்காக ப்ரீ இண்டிபெண்டென்ஸ் இராவிற்கு ஒரு தாவு தாவி விடுவார்கள்.  Early Cholas ,Medieval Cholas என்று இருப்பவை Fill In the Blanks- க்கூட தேறாது. மதுரை சுல்தானியர்கள் நாயக்கர்கள் விஜயநகர பேரரசு இவற்றையெல்லாம் பெயரளவில் மட்டுமே காட்டியிருப்பார்கள். இது ஒரு புறம் இருக்க புத்தகம் முழுக்க அக்பர்  பாபர் ஜஹாங்கீர் ஹிமாயூன் என்று மாறி மாறி முகலாய மன்னர்கள் மட்டுமே வியாபித்திருந்தார்கள் . அவர்களது சாதனை என்னென்ன ? முகலாய ராஜ்யத்தில் கட்டிய  கட்டிடங்கள் என்னென்ன ?  அவ்வளவு .. ஏன் பாகெத்புர் சிட்டியின் ஸ்பெல்லிங்கை கஷ்டப்பட்டு படித்தது கூட இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது. அதே வேளையில் தமிழ் பாடநூலில் மனுநீதி சோழன் கதை, பிசிராந்தையார் கதை, பாரி தேர் கொடுத்த கதை என நீதிக்கதைகளாக  சுருங்கியிருந்தது தமிழக வரலாறு . குதூப் மினாரின் உயரம் நீளம் அகலம் எல்லாம் மனப்பாடம் செய்ததாக நினைவு இருக்கிறது. ஒரு போதும் தஞ்சாவூர் கோயிலின் உயரத்தை மனப்பாடம் செய்ததாக நினைவே இல்லை. 


புகார் நகரம் போன்ற ஒரு மெட்ரோபாலிட்டன் நகரத்தை வடிவமைத்திருந்த தமிழரின் நகர மேலாண்மைக்குறித்தோ , பெருவழி என்று ஒன்றை அமைத்து நகருக்குள் செல்ல ஒரு வழி, வணிகர்கள் மற்றும் ஊரைக்கடந்து செல்பவர்களுக்கு வேறு ஒரு வழி என அமைத்த சாலை மேலாண்மைப்பற்றியோ  நேரடியாக வரலாறு பாட நூலில் படித்த ஞாபகம் அறவே இல்லை. டில்லியில் இருக்கும் ஒரு மாணவன் என்னைப்போலவே முகலாய வரலாறு படித்திருப்பான். ஆனால் வரலாற்று நாவல்கள் சொன்ன தமிழக வரலாறு குறித்தோ தமிழக மன்னர்கள் குறித்தோ  தப்பித்தவறிக்கூட அவன் படித்திருக்கவோ குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருக்கவோ வாய்ப்பே அவனுக்கு இருந்திருக்காதோ என தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால், 10ல் 8 தமிழக மாணவர்களும் அகபர் பரீட்சயம். அதே போல 10 வட மாணவர்களுக்கு  ஏதேனும் ஒரு தமிழ் மன்னன் பெயர் தெரிந்திருந்தால் அதுவே தாஜ்மஹால் அதிசயம்! இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் . கேரளா மாணவருக்கு ஜஹாங்கீர் தெரிந்திருக்கும். டெல்லி மாணவருக்கு சேரர் வரலாறு தெரிந்திருக்குமா? 


2., கில்ஜியைப் பற்றியும் துக்ளக் பற்றியும் கஜினியைப் பற்றியும் அதிகமாக சொன்ன மாநிலக்கல்வி  வரலாறு பாடநூல்கள்  ஏன் அவர்கள் தமிழக கோவில்களை கொள்ளை அடித்ததையும் சேர்த்து நம் மனதில் பதிவு செய்யவில்லை. போர் குற்றங்கள் அனைவருக்கும் பொதுவே என்றபோதும் ஒரு சாராரின் ஒரு தலைப்பட்சமாக உண்மைகள் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகிற அதே வேளையில் மறுபக்கத்தின் குறைந்த பட்ச கள நிலவரத்தைக்கூட பாட நூல்கள் பதிவு செய்யவில்லை 


3. கல்கி, சாண்டில்யன் பாலகுமாரன்  என ஆரம்பித்து காவல் கோட்டம்  சு.வெ ராஜ கேசரி/ சேரர் கோட்டை கோகுல் சேஷாத்திரி என்று எழுத்தாளர்கள் வாயிலாக தான் நுட்பமான தமிழக வரலாற்று செய்திகளை அறிய முடிந்ததே தவிர வரலாற்று பாட நூல்களிலோ தமிழ் பாட நூல்களிலோ சொல்லப்படவில்லை. 


சரி, இப்போது கள நிலவரம் என தெரிந்துக்கொள்ள சமச்சீர் புத்தகங்களை (6-12 தமிழ் மற்றும் ஆங்கில) கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொறிக்க ஆரம்பித்திருந்தேன். 

ரொம்பவே நிம்மதியாக இருந்தது. கில்ஜி எல்லாம் இல்லை. கீழடிபரவி இருந்தது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. 

ஒருவர் சூழல் நிமித்தமாக என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்  எந்த வேலை வேண்டுமானாலும் பார்க்கலாம் . பொதுக்கல்வி, வேலைப்பார்க்கும் இடம் சூழல் இவைகளைத்தாண்டி நாம் ஒவ்வொருவரும்  அடிப்படையாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாய பாடங்களாக மூன்று பாடங்கள் இருக்க வேண்டும். அவை முறையே 

 1. நமது மண் மற்றும் அடிப்படை வேளாண்மை குறித்த புரிந்துணர்தல் கல்வி . 2. மொழி வரலாற்றுக்கல்வி. 

 3.ஊர் வரலாற்றுக்கல்வி  . 

இவற்றை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம் ! அப்படி நாம் தெரிந்திருக்கவில்லை என்றால் நம் வரலாறு வேறு வடிவில்  நமக்கே பதியவைக்கப்படும். 





ஒரு ஜன்னல் என்ன செய்து விடப்போகிறது ?

ஒரு நாளில் முன் பின் அறிமுகமில்லாத எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம். கடந்து செல்கிறோம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் பார்த்த உடனேயே நம்...