ஒரு நாளில் முன் பின் அறிமுகமில்லாத எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம். கடந்து செல்கிறோம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் பார்த்த உடனேயே நம்மை ஈர்ப்பார்கள் . அந்த ஈர்ப்பே பிறகு சந்திப்பாக மாறி, பின்னாளில் அவர்களுக்கும் நமக்கும் நல்லதொருஉறவாக மலர்ந்திடும்.
அந்த வகையில் , சில சொற்கள் கூட அப்படித்தான்.
ஒரு நாளில் எத்தனையோ சொற்களை தினம் கேட்கிறோம். படிக்கிறோம். கடந்துசெல்கிறோம். ஆனால் ஒரு சில சொற்கள் படக்கென மனதில் பதிந்து விடுகின்றன .
அப்படி எனக்கு சமீபத்தில் அறிமுகமான சொல் - காலதர்.
முதலில் இந்த சொல்லைப்பார்த்ததும் காதலர் என்பதைத்தான் தவறாக எழுதி இருக்கிறார்களோ என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது , காலதர் என்றால் தமிழில் ஜன்னல் என்று பொருளாம்.
காலதர் என்பதை பிரித்தால் கால் + அதர் என்று வரும்.
'கால்' என்பதற்கு காற்று என்ற பொருள் தமிழில் உண்டாம். தமிழில் ஒரே சொல் பல பொருள்களில் வரும் என்பதை இங்கே நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
'அதர்' என்பதற்கு 'வழி' என்ற பொருள் கொண்டால், 'காலதர்' என்பது 'காற்று வழி' என்ற பொருள் தருகிறது .
இப்படி 'காற்று புகும் வழி' என்ற பொருள்படும் 'காலதர்' தான் ஜன்னல் என்பதற்கு இணையான தமிழ் சொல்லாம் . 'சாளரம்' என்பதும் இங்கே பொருந்தும்.
இதற்கிடையில், சிறுமூளை சும்மா இல்லாமல் , 'ஜன்னல்' என்ற சொல் வரும் திரைப்பாடல்களை எல்லாம் மாற்றிப்பார்த்தால் என்ன என்று ஒரு நொடி கிறுக்கு வேலைப்பார்த்தது. 'சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க?' என்று பளிச்சென முதலில் வரிசைக்கட்டி வந்தவர் நம் Ak தான் .. அடுத்த வரியை 'காலதர்' என்று மாற்றி பாடினால் சிம்ரனின் பல கோடி ரசிகர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் கொடூரமான இந்தத் திட்டத்தைகைவிட்டு மீண்டும் சிறுமூளை சொற்பொருளிடம் சென்றது.
எங்கே விட்டோம்.
ஆஹ், 'காலதர்' என்ற சொல்..
பொதுவாக நமக்கு அறிமுகமான ஒரு புதியவரிடம் பேச்சு கொடுக்க முதலில், 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..!' 'நீங்க எந்த ஊரு.. ?' என துவங்குவோம். பிறகு, 'ஓ! நான் கூட அந்த பக்கம் தாங்க..! அங்க இவரைத் தெரியுமா உங்களுக்கு?!' என்போம். அது போலவே காலதர் என்ற சொல்லிடம் பேச்சுக்கொடுத்து(கூகுளிட்டு) பார்த்ததில், நம் 'காலதர்' , சிலப்பதிகாரத்தில் வளம் வந்திருக்கிறது என்று தெரிய வந்ததது. சிலப்பதிகாரத்திற்கு எதற்கு அறிமுகம்! அதனால் நேரடியாக இளங்கோவடிகளும் ஒரு வணக்கம் வைத்து விட்டு, நாம் தேடிக்கொண்டிருக்கும் 'சொல்' அங்கே எங்கேஎப்படி வந்தது என்று பார்த்து விடலாம். சும்மா ஒன்றும் இல்லை. அதற்கு கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்னால் போக வேண்டும்!
காசா பணமா இருக்கவே இருக்கிறது, மனதின் காலப்பேருந்து. சட்டென ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு ஜன்னலோரம் இருக்கை பிடித்து.. இல்லை இல்லை.. காலதர் பக்கத்து இருக்கை பிடித்து கொஞ்சம் கண்ணயர்ந்தால் போதும். மற்றதெல்லாம் இளங்கோவடிகள் பார்த்துக்கொள்வார்.
அட.. அதோ.. நாம் இறங்க வேண்டிய 'ஸ்டாப்பிங்' வந்து விட்டது.
வெல்கம் டு புகார் சிட்டி!
புகார் நகரம் உங்களை வரவேற்கிறது என்று போரடிக்கும் மஞ்சள் கருப்புப் பலகை போர்டிற்கெல்லாம்இங்கே வேலையே இல்லை. காற்றில் கடல் ஈரம் கலந்த வாசமும் பல மொழி பேசும் யவனர் இரைச்சலும் கிண்கிணி போல ஒன்றாகக் கேட்டால் புகார் நகரம் வந்து விட்டது என்று அர்த்தம் என்று காதைக் கடித்தார் இளங்கோவடிகள் .
ஏனெனில் அது தான் புகார் நகரத்து அடையாளம்!
மயிலாடுதுறைக்கு அருகில் காவேரி கடலில் கடக்கும் வடக்கு எல்லையில் , கடல் ஒரு பக்கமும், நிலம் ஒரு பக்கமுமாக அமைந்தபகுதியை துறைமுகத்திற்கு ஏற்ற இடமாக எண்ணிய முற்கால சோழர்கள் அங்கே ஒரு நகரம் அமைத்து அதனையே தங்கள் தலைநகரமாகவும் நிறுவுகின்றனர். பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் என்றெல்லாம் அழைக்கப்படும் புகார் நகரம் , ஒரு மெட்ரோபாலிட்டன் நகரத்தின் அனைத்து வளங்களையும் பெற்றிருந்ததை பட்டினப்பாலை, புறநானூறு சிலப்பதிகாரம் போன்றஇலக்கியங்கள் தெளிவாக பதிவு செய்கின்றன .
துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை அலைந்துதிரிந்து வாங்குவதற்கும் வேடிக்கைப்பார்ப்பதற்கும் வசதியாக புகார் நகரத்து சாலைகள் எத்தனை அகலமாக கட்டியிருக்கிறார்கள். நமக்கெல்லாம் நூறடி சாலைகள் ஒரு பதினைந்து ஆண்டுகாலமாக தான் பழக்கம் . ஆனால் புகார் நகரத்து மக்களுக்கு அதெல்லாம் சர்வ சாதாரணம் போல .
அதோ அங்கே சாலைகளின் நடுவில் ஜேஜேவென கூட்டமாக இருக்கிறதே, அது தான் நாளங்காடி. (நாள் + அங்காடி) பகலில் இயங்கும் அங்காடி.
இரவு நேரத்திலும் முழு நேரமாக இயங்கும் அங்காடிகள் இங்கே உண்டாம். அதற்கு அல்லங்காடி என்று பெயர். (அல் + அங்காடி). அல் என்றால் இரவு- 'அல்லும் பகலும்' என்றும் சொல்வோமே, அந்த அல் தான்.
அப்பப்பா.. எவ்வளவு கூட்டம்.. எத்தனை விதமான மக்கள்! எத்தனை விதமான வாசனைகள். துறைமுகம் அருகிலேயே அங்காடிகள் இருப்பதால் வசதியாக இங்கே வந்து விடுகிறார்கள் போல. பழுப்பு வெயிலின் பல வர்ண கீற்றைப்போல கிரேக்கர்கள், ரோமானியர்கள் , சீனர்கள் என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் அழகழகாக அசைந்தாடும் மனித முகங்கள்.
அது சரி, இத்தனைப்பேரும் எங்கே தங்குவார்கள் என்று யோசிக்கும் முன்னரே ஒரு ஆறடி உருவம் சாலையின்இருபக்கங்களிலும் ஓங்கி உயர்ந்த மாளிகைகள் ஒன்றினுள் உள்ளேசென்று மறைகிறது.
'இது புகார் நகரத்தின் அந்த காலத்து ஏர் பி என் பி. துறைமுகம் வழியாக ஊருக்குள் வரும் பிரயாணிகள்,யவனர்கள் , தொழில் நிமித்தமாக இங்கேயே சிலகாலம் தங்கிவிடும் வணிகர்கள், அவர்கள் குடும்பத்தார் எனஅவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாட மாளிகைகள். இந்த பகுதி முழுக்க மாளிகைகள் தான், இந்தப்பகுதிக்கு மருவூர்ப்பாக்கம் என்று பெயர்!' என்று மறுபடி காதைக் கடித்தார் இளங்கோவடிகள்.
இந்தப்பகுதியா? அப்படி என்றால் இன்னொரு பகுதி இருக்கிறதா ?
இல்லாமலா? கடலின் பக்கத்தில் துறைமுகப்பகுதியில் வணிகம் வியாபாரம் செய்ய தோதுவாக இருக்கும் மருவூர்பாக்கம் இது . இங்கே வியாபாரிகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் வணிகர்கள் இருப்பார்கள் .
அதோ, அங்கே தெரிகிறதே! நிலப்பக்கமாக அமைந்தது , பட்டினம்பாக்கம். அங்கே அரசாங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், குடிகள், காவலர்கள் இருப்பார்கள். கடல்பக்கமாக மீனவர்கள், நெசவாளர்கள், பட்டுத்துணி வணிகர்கள், முத்து பவளம் போன்ற நகை வாணிபர்கள் வசிப்பார்கள். ' என்றார்.
அடேயப்பா..எத்தனை நுணுக்கமான திட்டமிடல் என்று புகார் நகர மேலாண்மையை வியந்தபடி அதன் பேரழகான மாட மாளிகைகளைப்பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென வந்த வேலை நினைவுக்கு வந்தது.
காலதர்.
வேயா மாடமும்;வியன்கல இருக்கையும்;
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்;
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்; என்று சிலப்பதிகாரத்தத்தில் இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் ,புகார் காண்டத்தில் வரும் பாடலில் தான் 'காலதர்' எனும் சொல் முதலில் காணக்கிடைக்கிறது.
வேயா மாடம் என்றால்
வியன்கல இருக்கை என்றால் பெரிய இருக்கை. வியன் - பரந்த /அகன்ற (தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்) அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இருக்கை.
'மான் கண் காலதர் மாளிகை இடங்களும்'
'மான் போன்ற கண்களை உடைய ஜன்னல்கள் கொண்ட மாளிகைகள்!'
அதென்ன மானின் கண்களைப் போன்றஜன்னல்கள். பொதுவாக காதலியின் கண்களை விவரிக்க மான்விழி என்று தானே சொல்வார்கள். அது சரி, அதென்ன மான் விழி.. வண்டலூர் ஜூவில் தெறித்து ஓடும் மானை தான் பார்த்திருக்கிறேனே ஒழிய ஒரு முறைக்கூட அதன் கண்ணைரசிக்கும் அளவிற்குபக்கத்தில் வைத்து பார்த்ததே இல்லை. உண்மையிலேயே அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் கிளம்ப, கூகிளினேன்.
அழகாகத்த்த்தான் இருக்கிறது. பார்க்க பார்க்க அகழ்ந்து செல்லும், அகண்ட, சீரான இடைவெளியில் மிதக்கும் கருமணிகள் . துறுதுறுப்பா, அடுத்த நொடி தாவலுக்கு தயாராகும் தவிப்பா என்றதொரு மாய சலனத்தைக்கொண்ட கண்கள்!
வள்ளுவர்சொல்லும் 'கண்ணின் துனித்தே கலங்கினாள்' கூட இந்த கண்கள் தானோ என்னவோ! முன்பு எப்போதோ போட்ட சண்டையை நினைவில் வைத்துக்கொண்டு கண்களில் செல்லமாக முறைத்த தலைவி, தலைவனைப்பார்த்ததும் அதனை மறந்து உடனேதுள்ளிக்குதித்து தழுவினாளாம்.
அட, எங்கே வந்து விட்டோம்! .
திருவிழாவில் தொலைவதும் தமிழில் தொலைவதும் ஒன்று தான். தொலைந்த பிள்ளையை மைக்கில் தேடும் பெற்றோர் போல, காலதர் தேடி வந்த பாப்பாவை (நான் தான்!) காணவில்லை என்று மைக்கில் குரல் கொடுக்கிறார், இளங்கோவடிகள்.
உடனே, சென்று விடுவோம்.
மான் கண்களை ஒத்த காற்று வந்து புகுந்துக்கொள்ள சீரான இடைவெளியில் அமைக்கப்பட்ட ஜன்னல்களை .. இல்லை இல்லை.. காலதரைக்கொண்ட மாட மாளிகைகளாம்!
கயவாய் என்றால் நதியின் முகவாய்
கயவாய் அருகே காண்போரை போக விடாமல் தடுக்கும் அழகழகான இருக்கைகள் போடப்பட்டிருக்கிறதாம்.
இப்படி புகார் நகர்த்துக்காட்சிகளை விவரித்துக்கொண்டே போகிறார் இளங்கோவடிகள்! முழுதாக படிக்க விரும்புவர்கள், உரைநடையாக விளக்கும் விக்கிப்பக்கத்திலிருந்து தொடங்கலாம்.
ஹப்பாடி ,
சந்தித்தாலும் சந்தித்தோம், பெரிய மனிதரைத்தான் சந்தித்திருக்கிறோம், போல ! ஒரேடியாக 2000 வருடங்கள் பின்னோக்கி இழுத்து வந்து விட்டது ஒரு சொல் ..சரி போய் வந்த களைப்பு தீர, கொஞ்சம் கண்ணசரலாம் என்றால் இப்போதைக்கு வெளியே வர தோதில்லை என்று உரண்டை இழுத்தபடி வேயா மாடத்து காதலரின் கீழ் நின்று காற்று வாங்குகிறது மனது :)
#காலதர்_கதைகள்
#பகுதி1