Saturday, April 23, 2022

புத்தகாஸனம்

 


இரண்டு மாதங்களுக்குப்பிறகு நேற்று தான் நானும் இயலும் நூலகம் சென்றிருந்தோம். 

பிரிஸ்கோ நகர் நூலகத்தில் குழந்தைகள் பிரிவு சற்றுப்பெரியது. வயதிற்கேற்ப பிக்க்ஷன் நான் பிக்ஷனில் தொடங்கி வரலாறு அறிவியல் புனைவு மாயாஜாலம் காலப்பயணம், காமிக்கல் , சுயசரிதை , பிறமொழி சிறார் நூல்கள் படம் போட்டது படம் போடாதது வரை மலைக்க வைக்கும்பலப்பிரிவுகள் உண்டு. 


மெனுகார்டில் விதவிதமாக எத்தனையோ எழுதியிருந்தாலும், மனம் கடைசியில் மட்டன் பிரியாணியில்  வந்து நிற்குமே அப்படி இயலுக்கு பிடித்தது விம்பி கிட்ஸ் என்றொரு நகைச்சுவை சீரிஸ் புத்தகங்கள். கடைசியாக விட்டதிலிருந்து தொடர வேண்டி அடுத்த 4 பாகங்களை எடுத்துக்கொண்டு வந்தாகிவிட்டது. 

‘இத்தனையும் ரெண்டு வாரத்துக்குள்ள நம்மால படிக்க முடியாது பாப்பா.. என்றேன் 

நான் படிச்சிருவேன்.. இல்லாட்டி ரென்யூ பண்ணிக்கலாம்ல என்றாள்.

அதுக்கு ஒன்னொன்னா படிச்சிட்டு வாங்கிக்கலாம்ல 

ஏன் படிச்சிக்கிட்டே ரென்யூ பண்ணலாம்ல 


சில நேரங்களில் நம் மினி வெர்ஷனிடம் நாமே பேசிக்கேட்பது போன்ற தெய்வீக அவஸ்தை வேறொன்றும் இல்லை. 

பத்து நிமிடங்களில் பத்து புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு, நான் ரெடி என்று நூலகத்தில் இருக்கும் விளையாட்டு வஸ்துக்கள் பக்கம் பறந்துவிட்டாள். 

வயதிற்கேற்ப புத்தகங்கள் போல, நூலகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு மறந்தும் போர் அடிக்காமல் இருக்க நூலகத்தில் நிறைய விளையாட்டு வஸ்த்துக்கள் அமைத்திருப்பார்கள். இது பெரிய நூலகம் என்பதால் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்குத்தனி விளையாட்டு அறை ஒதுக்கியிருந்தார்கள். பெரியவர்களோடு கூட்டு முயற்சியில் விளையாடும் நிறைய விளையாட்டுகள் வைத்திருக்கிறார்கள் . அதில் எங்களுக்கு மிகவும் பிடித்தது,. 

 மேக்னெட்டிக் குழாய் விளையாட்டு. முதலில்   சரியான இடைவெளியில்  வெவ்வேறு அளவில் உள்ள குழாய்களைப்பொருத்த வேண்டும். பிறகு முதல் குழாயின் ஒரு பக்கத்தில் இருந்து போடப்பட்ட பந்து அடுக்கிவைக்கப்பட்ட குழாய்கள் வழியாகப்  பயணித்து கடைசி குழாய் வழியாக வெளியே வர வேண்டும்.  ஒரு முறை மிர்சஸ் அண்ட் மிஸ்டர் சின்னத்திரையில் இதே போன்றதொரு விளையாட்டைப் பார்த்ததாக மங்கலான ஞாபகம். குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களைப்  போல பேசுவதும் பெரியவர்களுக்கான  நிகழ்ச்சியில் பெரியவர்கள் குழந்தைகள் போலவும் நடந்துக்கொள்ளும் விபரீத வினோதம் ஞாபகத்திற்கு வந்தது! என்னமோ! 

இப்போதும் இந்த விளையாட்டு இங்கே இருக்கிறதா என்று தெரியவில்லை. எட்டிப்பார்த்ததில் ஒரே கூட்டமாக இருந்தது. 5 வயதிற்கு மேலிருக்கும் பெருசுகளுக்கு என்று இன்னொரு ஓரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு அறிவியல் விளையாட்டுகள் வைத்திருக்கின்றார்கள். 5 வயதிற்கு மேல் இருக்கும் எதுவும் 5 நிமிடத்திற்கு மேல் ஒரு இடமாக இருக்காது என்பதை புரிந்துணர்ந்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு விளையாட்டு இயலுக்கு மிகவும் பிடித்தது. 


ஒரு கண்ணாடி குடுவைக்குள் குறிப்பிட்ட அழுத்தத்தில் குறிப்பிட்ட உயரத்திற்கு  மட்டும் பயணிக்கும்படியாக காற்றை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதற்குக்கீழே நிறைய வண்ணங்களில் நீளமான நெட் துணிகள். அவற்றை கண்ணாடி குடுவைக்குள் வீச, அழகாக அவை மேலே எழும்பி கண்ணாடி குடுவைக்குள் சுழன்றபடி  சுற்றி சுற்றி  வரும்.. சில குடுவையைத்தாண்டி பறக்கும். அதைப்பிடிக்க ஒரு தனி வலை வைத்திருக்கிறார்கள்.  பார்க்க அழகாக இருக்கும். சில நேரங்களில் நம் எண்ணங்களும் இப்படித்தானே என்று தோன்றும். நாம் இயங்கிக்கொண்டிருக்கும் அழுத்தத்திற்கு ஏற்றவாறு சுழலும் நம் எண்ணங்கள் நம்மை சுற்றி  நாமே அமைத்துள்ள இடைவெளிக்குள் பயணிக்கின்றன .  கோபமோ சந்தோஷமோ துக்கமோ எல்லாம் மனதிற்குள் சுழல்கின்றன. நம்மால் இயன்ற வரை. அதற்கு மேல் சுழல்பவைகளை எட்டிப்பிடித்து வலைக்குள் தள்ளும் வசதி தான் நம்மிடம் இல்லை. அதையும் கொடுத்துவிட்டால் பிறகு கடவுள் எதற்கு. சுழன்றும் இறைப்பின்னது  மனது! 

எப்படியும் ஒரு கால் மணிநேரம் இந்த வண்ண விளையாட்டு தொடரும் என்பதால் நானும் என் புத்தகத்தேடலை ஆரம்பித்தேன். 


எப்போதும் குழந்தைகள் பிரிவில் நானும் என் பங்கிற்கு சிலவற்றை எடுப்பேன். குறிப்பாக ப்ரீடீன்-டீன் வகைகள். சினிமாக்களில் எப்படி romcamo அப்படி எனக்கு ப்ரீடீன் புத்தகங்கள் . இழையோடிய எதார்த்தமான வெகுளித்தனகளூடே  ஒரு மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை கதை நெடுக கூட வரும். நிஜ வாழ்க்கையில் அவை பொருந்தாது எனினும் சில நேரங்களில் அப்படிப்பட்ட நம்பிக்கை தாத்தப்பூ மனதை மிகப்பத்திரமாக இதமான காற்றிலேயே ஊதிப்பறக்க விட்டு வேடிக்கைப்பார்க்க மிகப்பெரிய வடிகாலாய் இருக்கும். எனவே வழக்கம்போல அந்தப்பகுதியில் தான் வட்டமிட்டுக்கொண்டிருந்தேன். எழுத்தாளர்கள் பரீட்சயம் இல்லாத போது புத்தகத்தில் பொதுவாகவே முதலில்  கவர்வது தலைப்பு தான். அப்படி தலைப்பைப் படித்துக்கொண்டே வந்ததில் ஒரு தலைப்பைப் படித்ததுமே  கிளுக்கென சிரிப்பு வந்துவிட்டது. 

7X 9 = Trouble என்பது தான் அந்த புத்தகம். ப்ரீடீனுக்கும் முந்தைய வயதினருக்கான புத்தகம். யாரோ இடம் மாற்றி வைத்திருக்கிறார்கள். நல்லதாய் போனது.. முன்னரை படித்ததும் மனதிற்குள் மீண்டும் சிரிப்பலை.  மூன்றாம் வகுப்பு பையன் வில்சனுக்கு வாய்ப்பாட்டு மனனம் செய்வதில் பெரும் சிக்கல். குறிப்பாக ஏழாம் வாய்ப்பாடு. எவ்வளவு பெரிய உலகப்பிரச்சினை தெரியுமா இது ? இதைப்பற்றி ஏன் யாருமே பேச மறுக்கிறார்கள் என்று வில்சன் கேட்பது போல இருந்தது.  இன்னும் மூன்று வாரங்களில் 12 வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்து பரீட்சையில் தப்பில்லாமல் பாஸ் செய்பவருக்கு வில்சனின் கணக்கு டீச்சர் இலவசமாக ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுப்பதாக சொல்லியிருக்கிறாராம். ஹ்ம்ம்க்கும்  அப்படிப்பட்ட கோன் ஐஸே வேண்டாம்யா எனக்கு! என்று நினைக்கும் அளவிற்கு வில்சனை பாடாய்ப்படுத்துகிறது வாய்ப்பாட்டு மனப்பாடம்! வில்சன் 12 வாய்ப்பாட்டையும் படித்தானா என்பது தான் கதை! 

முன்னுரையைப்படித்ததும் மனதிற்குள் எப்போதும் ஒரு அங்கமாய்  அமர்ந்திருக்கும் லாசரா முதல் சுஜாதா வரை அனைவரும் குஷியானார்கள். வசதியாக ஒரு கார்னெர் குஷன் சீடைப்பிடித்து படிக்க ஆரம்பித்து விட்டேன். என்னைப்பார்த்ததும் இயலும் அவளது விம்பி கிட்ஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு பக்கத்தில் வந்தவள் என் புத்தக தலைப்பைப் படித்ததும் சிரித்தாள். எனக்கு அல்பப்பெருமையாக இருந்தது. பக்கங்களைப்புரட்டினேன். 


இந்த வில்சன் இருக்கிறானே. அவன் ரொம்பப்  பாவம். அவனே கணக்கு வகுப்பின் போது திணறி திணறி மூன்றாம் வாய்ப்பாடு எழுதிக்கொண்டிருக்கிறான்.  வரமாட்டேன் என்கிறது. திடீரென்று உலகமே இருண்டு விட்டது போல இருக்கிறது வில்சனுக்கு. அந்நேரம் பார்த்து பின் சீட்டில் இருக்கும் லாரா ஐந்தாம் வாய்ப்பாடு வரை முடித்து விட்டதாக கையை உயர்த்துகிறாள். அவனுக்கு எப்படி இருக்கும்! சரியாக அப்பொழுது கணக்கு டீச்சரும் நேரம் முடிந்து விட்டதென அறிவிக்கிறார்கள். காலக்கொடுமை! அதற்குள் அவன் பக்கத்தில் வந்த டீச்சர் அவனது மூன்றாவது வாய்ப்பாட்டின் நிலைமையைப் பார்த்து உள்ளுக்குள் கண்ணீர் வடித்து அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒரு கடிதத்தை அவனிடம் கொடுக்கிறார்கள். அதில் 

‘அன்புள்ள வில்சனின் அம்மா அப்பாவிற்கு! 

இன்னும் மூன்று வாரங்களில் 12 வாய்ப்பாடுகள் முடித்திருக்க வேண்டும். வில்சன் இன்னும் மூன்றிலேயே இருக்கிறான். பள்ளிநேரம் போக  வீட்டிலும் தயவு செய்து நீங்கள் பயிற்சி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! இப்படிக்கு கணக்கு டீச்சர் மிஸஸ் பாட்டர் என்றிருந்தது. விலஸனுக்கு இது மரண அடி. அதுவும் வெள்ளிக்கிழமை அன்று! வீட்டிற்கு இதைக்கொண்டுப்போனால் வீக்கெண்டே காலி! என்று தனக்குள் புலம்புகிறான். உடனே அவனை ஆறுதல் ப்படுத்தியது ஸ்கிப்பர். ஸ்கிப்பர் அவனது வகுப்பு வளர்ப்புப்பிராணி. செல்ல ஹாம்ஸ்டர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவராக ஸ்கிப்பரை எடுத்து சென்று வீட்டில் வைத்திருந்து விளையாடி முடித்து  மீண்டும் திங்கட்க்கிழமை கொண்டு வருவார்கள். இந்த முறை வில்சனின் முறை! அதனால் மூன்றாம் வாய்ப்பாட்டு இம்சையை உடனே மறந்து ஸ்கிப்பரோடு வீட்டிற்கு செல்லத்தயாராகிறான். அதே பள்ளியில் ukg படிக்கும் தம்பி கிப்ஸ்டரோடு வீட்டிற்கு வருகிறான். 

கணக்கு டீச்சர் கடிதத்தைப் பார்த்ததும் வில்சனின் அம்மாவும் அப்பாவும் அயற்சியாகிறார்கள். ஆனால் அவர்கள் ஹமாம் சோப்பு அம்மா அப்பா என்பதால் திட்டாமல் அடிக்காமல் அவனுக்கு பயிற்சி அளிக்க பெருமுனைப்பு எடுக்கிறார்கள். 

‘வில்சன்.. நான் ஸ்டாப் வாட்ச்சில் டைம் வைக்கிறேன்.. இரண்டு நிமிடத்திற்குள் முடிக்க நாம் பழகுவோம்..’ என்று பயிற்சி ஆரம்பிக்கிறார் அப்பா. 

அம்மாவும் கிப்ஸ்டரும் பக்கத்தில் அமர்ந்திருக்கின்றனர்.கூடவே கிப்ஸ்டரின் முதலை பொம்மை ஸ்நாப்பியும் பென்குவின் பொம்மை பெக் பெக்’கும் அமர்ந்திருக்கிறார்கள். கிப்ஸ்டரின் அருகில் ஒரு கூண்டில் ஸ்கிப்பர். ஆக மொத்தக்குடும்பமும் இவன் மூன்றாவது வாய்ப்பாட்டு லட்சணத்தை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது! .வில்சனுக்கு என்ன வாழ்க்கைடா இது என்பது போல இருக்கிறது! 


வில்சன் திணறுவதைப்பார்த்ததும் அவன் அப்பா, 

பெருக்கல் வரவில்லை என்றால் பரவாயில்லை. 3 3 ஆக கூட்டிப்பாரேன் என்றார். அவன் கடகடவென கூட்டினான் 18க்கு மேல் வரமாட்டேன் என்கிறது. என்ன கண்றாவி இது என்று அவன் நினைப்பதற்கும் தம்பி கிப்ஸ்டர் அசாலட்டாக கூட்டி 30 வரை சொல்கிறான். அப்பா அம்மா இருவரும் தம்பி கிப்ஸ்டரை வியந்து பார்க்கிறார்கள். கடவுளே இந்த நாள் முடியவே முடியாதா .இதை விட அவமானம் வேறென்ன இருக்க முடியும் ! என்று உள்ளுக்குள்ளேயே நொந்துப்போகிறான் வில்சன். 


வில்சன் கடைசியில் 12வது வாய்ப்பாடு வரை எழுதி பாஸ் செய்தானா, அவனதுகுடும்பமும் வகுப்பு நண்பர்களும் அவனுக்கு எப்படி உதவினார்கள்  என்பது மீதிக்கதை. 


ஒரு காலக்கட்டத்தில் மனிதனின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு  சம்பவம்! அதிலிருந்து எப்படி அவன் மீள்கிறான் தன்னை மீட்டெடுத்துக்கொள்கிறான் எனும் சீரியஸான கதைக்களத்தை படுரசனையாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் க்ளாடியா மில்ஸ். 

ஹீரோ இன்ட்ரோ மெனக்கெடல்.. பாட்டெல்லாம் கிடையாது. காதல் கத்திரிக்காய் எல்லாம் இன்னும் வரவில்லை. சண்டைக்காட்சிகள் உண்டு. முன்னே சொன்னேன.. கிப்ஸ்டரின் முதலையும் பென்குவினும்! அவர்கள் தான்  சண்டைப்போடுகிறார்கள் .. உக்கிரமான அந்த சண்டையின் முடிவில் இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள். எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கென்று வகுப்பில் கை தூக்கும் லாரா தான் விலஸனுக்கு ஒன்பதாம் வாய்ப்பாட்டை எளிதாக கற்கும் ரகசியத்தை சொல்லிக்கொடுக்கும் இடம் அழகு! அதைப் படிக்கும் போது மனதிற்குள் இருந்து சொல்லாமலே எழுந்து வந்து  ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசைத்தார். நல்ல மனுஷன்ப்பா! வில்சனின்  நண்பன் ஜாஷ் இருக்கிறானே , அவனுக்கு கணக்கு டீச்சர் பரிசளிக்கும் இந்த கோன் ஐஸ்க்ரீமே பிடிக்காது என்று சொல்லிவிட்டு சைலென்ட்டாக  12யும் எழுதி பாஸ் செய்து அதே கோன் ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்டுவிட்டு தான் மறுவேலைப்பார்க்கிறான்! பொல்லாத உலகம்!  இப்படி அடுக்கடுக்கான நெருக்கடி சூழ்நிலையில் வில்சனின் மனநிலையை சரியாக கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் மில்ஸ். 

புத்தகத்தை நிறைவு செய்தபோது மிக சமீபமாக மனதிற்குள் குடியேறியிருக்கும் படுசீரியஸான டாஸ்டாவ்ஸ்கியும் சிரித்து விட்டார். வேறென்ன சார் வேணும்! 


No comments:

Post a Comment

ஒரு ஜன்னல் என்ன செய்து விடப்போகிறது ?

ஒரு நாளில் முன் பின் அறிமுகமில்லாத எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம். கடந்து செல்கிறோம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் பார்த்த உடனேயே நம்...